அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Apr 17, 2011

முனைவர். வேலுசரவணனுடன் ஒரு தேநீர் சந்திப்பு..!

மது நூலகத்தின் குழந்தைகளுக்கான கோடைகால நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியிலிருக்கும் முனைவர்.வேலுசரவணன் அவர்கள் நமது நூலகத்திற்கு வருகை புரிந்திருந்தார். அடிப்படையில் இயற்பியலில் பட்டம் பெற்ற இவர், நாடகவியலில் முனைவர் பட்டம் வரை பெற்றிருக்கிறார். அவருடன் நாடகம் முடிந்தவுடன் கலந்துரையாட கிடைத்த வாய்ப்பில் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே....

வணக்கம் சார், ஒரு சிறந்த நிகழ்ச்சியை கண்டுகளித்த நிறைவில் உங்களை சந்திக்கிறோம், முதலில் நல்ல படைப்பை அளித்தமைக்கு நன்றி. நாடகத்துறையில் அதிலும் குழந்தைகள் உலகில் நீங்கள் நுழைந்ததை பற்றி சொல்லுங்களேன்...

"வணக்கம். குழந்தைகளை மகிழ்விப்பது எனக்கு பிடிக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சியை விட உலகில் பெரியது என்ன இருக்கிறது?!. அதற்காகத்தான் குழந்தைகளுக்கான உலகில் வந்தேன் என்று நினைக்கிறேன். நான் புதுவை பல்கலைக்கழகத்தில் நாடகவியல் பட்டம் பயிலும்போது எனது குருவாக இருந்தவர் திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.

1991-இல் அப்போதைய புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் திரு. ஜான் லூயிஸ் அவர்களின் ஊக்கத்தின் பேரில் "ஆழி" என்ற பெயரில் நாடகக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல பள்ளி மற்றும் குழந்தைகளுக்கான கல்வி நிறுவனங்களில் நாடகங்களை அரங்கேற்றியுள்ளோம்.

புது தில்லி, சங்கீத நாடக அகாடமி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு இயக்குனரை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் நாடகம் இயக்கச் செய்வது வழக்கம். 1993-இல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்கள் சார்பாக நான் தேர்வு செய்யப்பெற்றேன். அவ்விழாவில் நாடகம் நிகழ்த்திய மிகவும் இளம் வயது இயக்குனர் நான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நாடகங்களுக்கு அடிப்படையாக மேலைநாட்டு இலக்கியங்கள் உட்பட பல படைப்புகளின் கருத்துக்களை எடுத்தாண்டிருக்கிறீர்கள்.. சிறந்த புத்தக வாசகராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். உங்களுக்கும் நூலகத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி....

"நீங்கள் சொல்வது உண்மை. நூலகத்தை பயன்படுத்தவும், புத்தகங்களை நேசிக்கவும் என்னை ஊக்கப்படுத்தியதே எனது ஆசிரியர்கள் தான். இந்திரா பார்த்தசாரதி, கே. ஏ. குணசேகரன், பிரபஞ்சன் போன்ற சிறந்த எழுத்தாளர்களே எனக்கு ஆசிரியர்களாக அமைந்தது எனது பாக்கியம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு புத்தகங்களை நூலகத்தில் இருந்து எடுத்து படிக்க வேண்டுமென்பதும், அதில் ஒன்று கண்டிப்பாக ஆங்கில நூலாக இருக்க வேண்டுமென்பதும் எனது குரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எனக்கு அளித்த அன்புக் கட்டளை. அதன் பயனாகவே நான் தொடர்ந்து நூலகத்தை உபயோகிக்கவும், புத்தகங்களை வாசிக்கவும் முனைந்தேன்."

நீங்கள் வாசித்த புத்தகங்களை பற்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா..?

"கண்டிப்பாக. முதன்முதலில் நான் வாசித்த இரண்டு புத்தகங்கள், Jean-Paul Sartre எழுதிய பிரெஞ்சு நாடகமான "No Exit" என்பதன் மொழிபெயர்ப்பு நூலான "மீள முடியுமா?!" மற்றும்

இரண்டாம் உலகப்போரின் போது ஒரு தாயின் கதையாகப் பயணிக்கும் Brecht எழுதிய Mother Couriage & Her Children என்ற ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஆங்கில நாடகமும் ஆகும்.

இதுபோக Anton Chekhov -இன் "The Chair" (தமிழில் "பதவி"), ரஷிய மொழிபெயர்ப்பு நூல்களான "முதல் ஆசிரியர்" (The First Teacher), "குல்சாரி" , "ஜமீலா", "அன்னை வயல்"; உலகபுகழ்பெற்ற டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு (Renaissance), "போரும் சமாதானமும்" (War and Peace) போன்றவை என்னைக் கவர்ந்த நூல்களாகும்.

ஸ்காண்டநேவிய கடற்கொள்ளையர்களின் கதைகள், பிரஞ்சு இலக்கியங்களான "லிட்டில் பிரின்ஸ்", "அந்நியன்" (Stranger), வங்காள மொழி படைப்புகளான "நீலகண்ட பறவையை தேடி", "கவி" (Poet), "வெண்குருதி " போன்றவை நான் விரும்பி வாசித்த நூல்கள்.

அலெக்சாண்டர் புஷ்கின், பாரதியார் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்கள் ஆவர்.

"ரஜாக் காலம்" என்ற பெயரில் மகாகவி பாரதியாரால் மொழிபெயர்க்கப்பட்ட தாகூரின் கதையை புதுமையான முறையில் நாடகமாக நிகழ்த்தினேன். இளஞ்சிறார்களின் பருவ மாற்ற ரகசியங்களை - துன்பங்களை கண்ணீரோடு சொன்னது அந்தக் கதை.

இன்றைய நிகழ்ச்சி பற்றி....

"மிகவும் பிடித்திருந்தது. நான் எத்தனையோ இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும் ஒரு நூலகத்தில் நடத்த வேண்டுமென்பது எனது நீண்ட நாள் விருப்பம். அந்த விருப்பம் இங்கே - இந்தியாவின் பிரமாண்டமான நூலகத்தில் நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே..

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறார்கள் தாங்கள் இந்த நூலகத்திற்கு தினமும் வரபோவதாகவும், தினமும் என்னை இங்கு நிகழ்ச்சி நடத்துமாறும் கேட்டு அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது என்னை மேலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

எனக்கு பிடித்த இரண்டு விஷயங்களை ஒரே இடத்தில் கண்டது மகிழ்ச்சியளித்தது. ஒன்று, குழந்தைகள்... மற்றது புத்தகங்கள் ! இவ்விரு விஷயங்களையும் இணைத்து நிகழ்ச்சி நடத்தியதை பெருமையாக கருதுகிறேன். "

அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி உங்கள் கருத்து?

"இந்த நூலகம் மட்டும் சரியாக பயன்படுத்தப்படுமேயாயின் தமிழ்நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகள் இனிதான் உருவாகப் போகிறார்கள். அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டின் அதிசய உலகம் (Wonder Land of Tamilnadu) என்பேன்.

குழந்தைகள், சிறார்கள் இந்த நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென்பது எனது விருப்பம். சிறந்த மேதைகள் எதிர்காலத்தில் உருவாக இது பயனுள்ளதாக அமையும்.

குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் விதத்தில் கதைகளை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற வேண்டும் என்பது எனது கருத்து.

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கும் இங்கே நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்." என்றவாறு விடைபெற்றார் குழந்தைகளால் "வேலு மாமா" என்று அன்போடு அழைக்கப்படும் முனைவர்.வேலுசரவணன் அவர்கள்.

அவரோடு உரையாடியபோது கவனித்தது, குழந்தைகளை பற்றி பேசும்போது அவரே குழந்தையாகி விடுகிறார், நம்மையும் குழந்தையாக்கி விடுகிறார். அதுவே அவரின் வெற்றி.

அழிந்துகொண்டிருக்கும் நாடகக்கலையை அதுவும் குழந்தைகளுக்கான தளத்தில் வெற்றிகரமாக இயக்கிகொண்டிருக்கும் அவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

மீண்டும் ஒரு தேநீர் பொழுதில் மற்றுமொரு சிறப்பு விருந்தினருடன் கலந்துரையாடுவோம். நன்றி!.

கலந்துரையாடல் : ஆ. அசோக் குமார்

1 comment:

  1. mr. velu saravanan drama team has been done wonderful performance to childran and adults.their acting was reflects "PADHAL SARKAR, Father of indian drama".

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL