அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jul 20, 2011

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகம் வருகை


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 20.07.2011 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய நூலகத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன். தொழில் மற்றும் கல்வித்துறைகளில் வளர்ந்த சென்னை நகருக்கு வந்ததில் பெருமிதம். 21ம் நூற்றாண்டை வடிவமைப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆசியாவின் எதிர்காலத்தை இந்தியா நிர்ணயிக்கும். இந்தியாவின் வளர்ச்சியை பெருமையுடன் பார்க்கின்றோம். இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு உலக அரங்கில் முக்கியமானதாகும். ஐ.நா.,வில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதே இருநாடுகளுக்கும் இலக்காகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் பாதுகாப்புத்துறையில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் பொருளாதார உறவை விரிவுபடுத்த வேண்டும். சந்தைகளை திறந்து விடுவதன் மூலம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் பொருளாதாரம் மேம்படும். நாம் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளோம். நம்மிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இன்றியமையாதது. இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பலமான உறவு முக்கியமானதாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் உலக அளவில் சிறந்ததாக உள்ளது. ஈராக் மற்றும் எகிப்து நாடுகளில் தேர்தல் நடத்த உதவ வேண்டும் சர்வதேச அளவிலான பிரச்னைகளை தீர்ப்பதில் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் முன்னெடுத்து செல்ல வேண்டும். மத்திய கிழக்கு மற்றும்வடக்கு ஆப்ரிக்காவில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் மியான்மரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இந்தியா அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் அரசியல் பொருளாதர நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழக மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க வேண்டும். டர்பனில் நடக்கவுள்ள உலக வெப்பமய மாநாடு வெற்றி பெற இந்தியா உதவ வேண்டும். ஈரானில் அணு ஆயுதங்களை தடுக்க வேண்டும். அணு ஆயுதங்கள் பரவலை தடுப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு என கூறினார்.


Click Here to see more photos.

Jun 7, 2011

"அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜெரோனிமோ ஸ்டில்டன்"

ஜெரோனிமோ ஸ்டில்டன் நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவிற்கு 01.06.2011 அன்று விஜயம் செய்தார் இந்நிகழ்ச்சியானது ஸ்கொலாஸ்டிக் நிறுவனமும் அண்ணா நூற்றாண்டு நூலகமும் இணைந்து குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தின் மேல் ஆர்வத்தை தூண்டவும் நடத்தப்பட்டது.

ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் குழந்தைகளுக்கு பிரபல எழுத்தாளர் ஜெரோனிமோ ஸ்டில்டன் பற்றியும் அவர்களது கதையில் எழுத்தாளர் பெயரிலேயே வரும் எலி கதாபாத்திரம் பற்றியும் சிறு முன்னுரையினை அளித்தார்.
எலி கதாபாத்திரமானது குழந்தைகள் பிரிவிற்கு வந்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் தாங்கள் புத்தகத்தில் படித்த கதாபாத்திரமானது நேரில் வந்ததை கண்டு மிகவும் மகிழ்ந்தனர்.
ஸ்வாதி எனும் நூலக குழந்தை வாசகரால் ஜெரோனிமோ ஸ்டில்டன் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக வாசித்து காண்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து ஜெரோனிமோ ஸ்டில்டனின் தங்கையான தியா ஸ்டில்டன் பற்றிய குறுக்கெழுத்து புதிர் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தார் பரிசுகளை வழங்கினர்.

May 15, 2011

சிறுவர்களுக்கான 5 நாட்கள் ஓவியப்பயிற்சி பட்டறை..!





கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, நமது நூலகத்தில் 8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஓவியப்பயிற்சி பட்டறை நடைபெற்றது.

10-05-2011 முதல் 14-05-2011 வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 35 சிறுவர்கள் பங்குபெற்றனர். என்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள திருமதி. மேனகா நரேஷ் அவர்கள் ஓவியக்கலையை சிறுவர்கட்கு எளிய முறையில் பயிற்சியளித்தார்.

ஒவ்வொரு நாளும் வரைவதற்கான அட்டை, வண்ணம், தூரிகைகளுடன் கலந்துகொண்ட குழந்தைகள், கண்ணை கவரும் ஓவியங்களுடன் பயிற்சியை நிறைவு செய்தனர். அந்தந்த நாட்கள் வரையப்பட்ட ஓவியங்கள் நூலகத்தின் வரவேற்பு பகுதியில் வாசகர்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்பட்டன.

சிறார்களின் ஓவியத் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் பங்குபெற்ற அனைவருக்கும் பயிற்சியாளரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சிறந்த ஓவியங்களை படைத்த சிறார்கள் கோகுல்ராஜ், கீர்த்திவாசன், லக்சயா ஆகியோருக்கு சிறப்பு பரிசாக "வண்ணம் தீட்டும் உபகரணங்கள்" வழங்கப்பட்டன.

May 7, 2011

"ஏக்கி தோக்கி" - சிறுவர் கதை !


"க்கி தோக்கி" எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி நமது நூலகத்தில் இன்று (07.05.11) நடைபெற்றது. மராத்தி மொழி வார்த்தைகளான ஏக் (ஒன்று) மற்றும் தோ (இரண்டு) ஆகியவற்றை தலைப்பாக கொண்ட இந்த சிறுவர்களுக்கான கதை இரண்டு சகோதரிகளை பற்றியது. "நல்ல மனமே செல்வத்தை ஈட்டும் கருவி" எனும் நீதியை வலியுறுத்திய இக்கதையை திருமதி. ஷோபனா அவர்கள் சிறப்புற வழங்கினார்.

குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் "Something from Nothing" என்ற தலைப்பில் யூத நீதி கதையொன்றும் இடம் பெற்றது.

கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒருபகுதியான, இந்த நிகழ்ச்சியின்
இறுதியில் இடம்பெற்ற கேள்வி-பதில் பகுதியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.


May 4, 2011

வண்ணம் தீட்டுதல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01/05/2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஸ்கொலாஸ்டிக் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியினை நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் நடத்தினர். 4 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஏறக்குறைய 100 குழந்தைகள் வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தங்களின் ஓவிய திறமையையும் கற்பனை திறனையும் வெளிப்படுத்தினர்.

4 வயது முதல் 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டிராகன் படத்திற்கு வண்ணம் தீட்டினர். 8 வயது முதல் 10 வயது வரையான குழந்தைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு "புத்தக குறி" (Book Mark) செய்து அதில் படம் வரைந்து வண்ணம் தீட்டினர். 11 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்கள் புத்தக உரையினை செய்து வண்ணம் தீட்டினர்.

வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் தங்களின் கற்பனைத்திறனை வெளிப்படுத்தி வாசகர்களையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினர். நிகழ்ச்சியின் முடிவில் பங்கு கொண்ட அனைவரும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஸ்கொலாஸ்டிக் நிறுவனத்தாருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டிய சங்கமம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கோடை கொண்டாட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சியாக நாட்டிய சங்கமம் என்ற நாட்டிய நிகழ்ச்சி 30/04/2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை அடையாரைச்சேர்ந்த "பரத சூடாமணி அகாடமி"யின் குழந்தைகள் பங்கு கொண்டு நடனமாடினர். இந்நிகழ்ச்சியானது மூன்று பூ மொட்டுக்கள் போன்ற குழந்தைகளின் நாட்டியாஞ்சலியுடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து புஷ்பாஞ்சலி, ஜோதீஸ்வரம், பாம்பு நடனம், மயில் நடனம், நடேச நடனம், ஜிப்சி நடனம், கோலாட்டம், தில்லானா போன்ற நடனங்கள், மங்களத்துடன் நிறைவு பெற்றது.
இந்த பத்து வகையான நடனங்களில் குழந்தைகள் மிகவும் சிறப்புடன் பங்கு கொண்டு தங்களது நடனத்திறமையால் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியினை நூலகத்திற்கு வந்திருந்த குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அகமும் முகமும் மலர கண்டு ரசித்தனர்.
இதனை கண்டு ரசித்த அடையாரை சேர்ந்த S. பவித்ரா இந்நிகழ்ச்சியை மிகவும் விரும்பியதாகவும் தானும் நடனம் கற்க போவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியின் முடிவில் இதில் பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Apr 27, 2011

குழந்தைகளுக்கான யோகாசன நிகழ்ச்சி

குழந்தைகளுக்கான யோகாசன நிகழ்ச்சி 24.04.2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மாஸ்டர். S. நிரஞ்சன் மற்றும் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. சூரிய நமஸ்காரத்துடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், சிறார்கள் YOGA என்ற எழுத்து வடிவில் தங்களின் உடலினை மடித்தும் வளைத்தும் நின்றனர்.
எட்டு வயதே ஆன சிறுவன்.S. நிரஞ்சன், நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். அவர் மிகவும் கடினமான ஆசனங்களான, விருச்சிகாசனம், கண்ட பேருண்டாசனம், மயூராசனம் போன்ற ஆசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். மேலும் G. கமலி, M. சாஜன் மேனன், J. அருண்குமார் ஆகியோர் வஜ்ராசனம், சக்ராசனம், ஹாலாசனம், சிரசாசனம் போன்ற ஆசனங்களை செய்துகாட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில் இச்சிறார்களுக்கு பயிற்ச்சியளித்துவரும் யோகசன ஆசிரியர் முனைவர். V. பாலகிருஷ்ணன் அவர்கள், பார்வையாளர்களாக பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் 15 எளிதான ஆசான்களை கற்பித்து, தினமும் அவற்றை செய்வதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளான எளிதான செரிமானம், மூச்சுப்பயிற்சி, மேலும் காய்ச்சல், சளி, மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை போன்ற இதனால் ஏற்படும் பற்பல நன்மைகளை விளக்கினார்.

யோகாசன ஆசிரியர். முனைவர். V. பாலகிருஷ்ணன், சிறுவன். S. நிரஞ்சன் மற்றும் குழுவினர்க்கும், இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்குகொண்ட பார்வையாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
Thanks for Your Visit : Blog & Website Team, ACL